Tuesday, 13 September 2016

திருமண மந்திரங்கள் ஒரு பார்வை - 01

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லுவதோடு, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.
மாங்கல்யம் தந்துனானே 
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே 
த்வம் சஞ்சீவ சரத சதம்

இதெல்லாம் வழமைதானே... ஆனால் பொருள்..?...
மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை
மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே
(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா- இன்றியமையாத(வளே)
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )
சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு , சதம் – நூறு)
மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர். வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து இருக்கும் உறவினர் நண்பர்களிடம் “சார் , கொஞ்சம் வியூ கொடுங்க” என்று கோருகின்றனர். இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை மணப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார் மணமகன்!
மேல தாள ஓசை ஒருபுறம், உறவினர் நண்பர்களின் உரையாடல்கள்… இப்படிப் பரபரப்புக்கு நடுவிலே கவனிக்கப் படாமல் போவது இந்திய சமுதாயத்தின் மிகச் சிறந்த நாகரிக சிந்தனையான இந்த செய்யுள்,
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”
புரோகிதரும் இந்த மந்திரத்தின் அர்த்தததையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லிக் கொடுப்பதில்லை. எல்லோரும் ஹாப்பியா ஒருத்தரை ஒருத்தர் கங்கிராஜுலேசன் பண்ணிண்டு இருக்கா, நாம ஏன் அர்த்தம் பொருள் எல்லாம் சொல்லி டிஸ்டர்ப் பண்ணனும், நாமளும் ஜோதியிலே கலப்போம் என்கிற ரீதியில் எத்தனையோ சடங்குகளில் ஒன்றாக இந்த மந்திரத்தையும் சொல்கிறார்.
இந்த மந்திரம் எந்த ஒரு தேவனையோ, கடவுளையோ புகழ்ந்தோ, அவர்களிடம் விண்ணப்பமாக அமைந்ததோ இல்லை. இந்த மந்திரம் மணமகன் தன்னுடைய வாழ்க்கையில் மனைவி எந்த அளவுக்குஇன்றியமையாதவள் என்பதை உணர்ந்த நிலையை வெளிப்படுத்தும் விதமாக,மனைவியின் மேன்மையை போற்றி அவள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் பாவாக அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் கோட்பாட்டை இந்த மந்திரம் சொல்கிறது.
இந்திய சமுதாயத்தில் ஒரு மனிதனுக்குஇன்றியமையாததாக உள்ளது எது என்றால்அது அவன் மனைவியே!மற்ற ஆட்சி, அதிகாரம், செல்வங்கள் , நில புலம், காடு , கழனி, வாய்க்கால் வரப்பு, தோட்டம் தொரவு… உள்ளிட்ட எல்லாவற்றியும் இழந்து அவன் நடுத் தெருவிற்கு வந்தாலும் அவனை அன்பு செய்து அர்ப்பணித்த மனைவி அவன் அருகில் இருந்தால் அவன் கடைத்தேறி விடுவான்.
திருமணத்தின் போது மணமகன், தன வாழ்வில் மனைவியின் முக்கியத்துவத்தை உணரந்தவனாக, இவ்வளவு சிறப்புகளுடைய என வாழ்க்கை துணைவியே நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் என்பதை சொல்லும் மந்திரமே இந்த 
“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…. !”

இந்த மந்திரம் மனித வாழ்க்கையின் அடிப்படையை உணர்த்தும் பகுத்தறிவு கோட்பாடாகும் . இந்த மந்திரத்தை வெறுமனே சொல்வதோடு நில்லாமல், இந்த மந்திரத்தின் பொருளை தெரிந்து கொள்வதோடு நிறுத்தாமல், இந்த மந்திரத்தின் உண்மையை மனதில் உணர்ந்தவன், தன் மனைவி தன் வாழ்க்கையில் எந்தளவுக்கு இன்றியமையாதவள் என்பதை அறிந்து கொண்டவனின் வாழ்க்கை ஓடம் சிக்கி சிதறாமல் காப்பாற்றப் படும்.
இந்த மந்திரத்தை கணவன், திருமண நாளன்று மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்தவுடன் தன் மனைவியிடம் சொல்வது இன்னும் சிறப்பாகும்.
இதற்கு பிறகும் மந்திரம் சொல்லபடுகிறது... அதனை அடுத்த பதிவில் பார்ப்போம்...
அதற்கு முன்பு சில சடங்குகளை இங்கு பார்ப்போம்.....
முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.
அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’
பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்:‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம்,‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.
மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை,‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’
இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.
மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’
அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’
மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’
பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்:‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’
பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்!
இதில் மந்திர பொருள் கொள்வதை இங்கு பார்த்துவிட்டு அடுத்து மந்திரத்தை பார்ப்போம்......
சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளில் மட்டுமே தான் ஒரே எழுத்துக்கு நான்கு வகையான ஒலிக் குறிப்புகள் (க, க) உள்ளன என்பது தவறு – தமிழிலும் உண்டு. காடு என்பதில் உள்ள டு உச்சரிப்பு காட்டு என்பதில் உள்ளதுடன் மாறுபடுவது போல. (மேலும் ட = படம், பட்டம், கி = முகில், மூங்கில்…) தமிழ் இலக்கணத்தில் நான்கு ஒலிகளுக்கு நான்கு எழுத்துக்கள் இடாமலே சாமர்த்தியமாக அமைத்திருக்கிறார்கள். மந்திரங்கள் என்று வரும் போது தமிழானாலும், சம்ஸ்க்ருதமானாலும் சரியான உச்சரிப்பு, பொருள் உணர்ந்து ஓதுவது ஆகியவை அவசியம்.
மீமாம்சா சாத்திரங்களில் உச்சரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உச்சரிப்பு பிறழ்ந்ததால் “நித்யத்வம்” என்று இறவா வாழ்க்கையை கேட்க நினைத்த கும்பகர்ணன் நா பிறழ்ந்து “நித்ரத்வம்” என்று உச்சரிப்பு மாறி தூக்கத்தை வரமாக பெற்ற கதை தெரிந்திருக்கும்.
சரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்டம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.
மஹா பாஷ்யத்தில் இலக்கணத்தை ஏன் நாம் கற்க வேண்டும் என்பதற்கு, பதஞ்சலி முனிவர்:
ऊहः खलु अपि। न सर्वैः लिङ्गैः न च सर्वाभिः विभक्तिभिः वेदे मन्त्राः 
निगदिताः। ते च अवश्यं यज्ञगतेन यथायथं विपरिणमयितव्याः। तान्न अवैयाकरणः 
शक्नोति यथायथं विपरिणमयितुम। तस्मादध्येयं व्याकरणम्।

ஊஹ: க²லு அபி| ந ஸர்வை: லிங்கை³: ந ச ஸர்வாபி⁴: விப⁴க்திபி⁴: வேதே³ மந்த்ரா: 
நிக³தி³தா:| தே ச அவஸ்²யம்ʼ யஜ்ஞக³தேன யதா²யத²ம்ʼ விபரிணமயிதவ்யா:| தான்ன அவையாகரண: 
ஸ²க்னோதி யதா²யத²ம்ʼ விபரிணமயிதும| தஸ்மாத³த்⁴யேயம்ʼ வ்யாகரணம்|

வேத மந்திரங்களில் ஆண்பால் – பெண்பால் ஆகிய பாலினம், ஒருமை பன்மை என்று எல்லா சந்தர்ப்பங்களுக்கும் மந்திரங்கள் விதவிதமாக தரப் படவில்லை. ஒருமையோ, பன்மையா ஒரே வகை தான் தரப் பட்டுள்ளது, இலக்கணத்தைக் கற்காதவரால் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு மந்திரங்களை மாற்றி சரியான அர்த்தத்தில் பிரயோகிக்க முடியாது. ஆகவே வியாகரணத்தைக் கற்க வேண்டும் என்று கூறுகிறார். இதில் ஒரு வைதிகர் முதலில் வேத மந்திரங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், பின் இலக்கணத்தை அனுசரித்து அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதனை மாற்றி சொல்ல வேண்டும் என்பது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. பொதுவாக மந்திரங்களை மாற்றாமல் சொல்வதே புனிதமானது என்கிற எண்ணம் இருக்கிறது – மீமாம்சா சாத்திரங்களும் அப்படியே கூறுகின்றன.
எந்தெந்த சூழ்நிலைகளில் மந்திரங்களை மாற்ற வேண்டி இருக்கிறது…? ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
திருமண மந்திரங்களில் சிலவற்றில் இது போன்ற சூழல் எளிதாக ஏற்படும்.
वाचा दत्ता मया कन्या, पुत्रार्थं स्वीकृता त्वया ।
வாசா த³த்தா மயா கன்யா, புத்ரார்த²ம்ʼ ஸ்வீக்ருʼதா த்வயா |
“என் வார்த்தையால் (உறுதி செய்து) என்னுடைய மகளை தந்தேன். உங்களுடைய மகனுக்காக உங்களால் ஏற்றுக் கொள்ளப் படுகிறாள் அவள்”
இதுவே மாப்பிள்ளைக்கு அப்பா இல்லாமல் அவரது அண்ணனோ, இதர உறவினர்களோ கல்யாணம் செய்து வைப்பதாக இருந்தால் அதற்கு தகுந்தவாறு மந்திரத்தை மாற்ற வேண்டி இருக்கும். இது போல, திருமணம் ஆகிற பெண்ணின் வயதைக் கொண்டும் மந்திரங்கள் உள்ளன…
अष्ठवर्षा त्व इयं कन्या पुत्रवत् पालिता मया | 
इदानीम् तव पुत्राय दत्ता स्नेहेन पालयताम् ||

அஷ்ட²வர்ஷா த்வ இயம்ʼ கன்யா புத்ரவத் பாலிதா மயா | 
இதா³னீம் தவ புத்ராய த³த்தா ஸ்னேஹேன பாலயதாம் ||

“எட்டு வயதான இந்த பெண்ணை மகனைப் போல வளர்த்து விட்டேன். இப்போது உங்களுடைய மகனுக்காக தரப்படுகிறாள், அன்புடன் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறது இந்த மந்திரம். இப்போது பெண்ணுக்கு எட்டு வயது இல்லை என்றால் எந்த வயதோ அதற்கு தகுந்தவாறு மந்திரம் மாற்ற வேண்டும். அதே போல பையனுடைய அண்ணன் முன்னிலையில் கல்யாணம் நடந்தால் அதுவும் உங்கள் சகோதரனுக்கு என் பெண்ணை தருகிறேன் என்பது போல மாற்ற வேண்டும்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் தன்னுடைய தங்கை மகனுக்கு திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தார். திருமணம் செய்து வைத்த புரோஹிதர் “தவ புத்ராய” என்று சொல்ல, கல்யாணம் பண்ணி வைக்கிற யஜமானர் (யக்ஞத்தை செய்து வைப்பவர்) இது என் பிள்ளை இல்லை என் தங்கை பிள்ளை என்று கூறுகிறார். இப்போது புரோஹிதர் சம்ஸ்க்ருத இலக்கணம் தெரியாதவர். அவர் வேறு எப்படி சொல்வது என்று தெரியாமல் “தவ பகிநிஸ்ய புத்ராய…” என்று சொல்லி தொடர்ந்தார். இது பகிந்யா: புத்ராய என்று இருக்க வேண்டும். ஆனால் திருமணம் செய்து கொள்பவர், புரோஹிதர் அங்குள்ளவர்கள் எவருக்கும் சம்ஸ்க்ருதம் தெரியாது – ஆனால் கல்யாண மந்திரம் சம்ஸ்க்ருதத்தில் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள்.
ஸ்ரீ என்கிற சொல்லை மரியாதைக்குரிய, புனிதமான, லக்ஷ்மிகரமான, மங்கலமான என்ற அர்த்தத்தில் எல்லா இடத்திலும் உபயோகிக்கின்றனர். வேதத்தில் ஸ்ரீஇந்திரன், ஸ்ரீவருணன் என்று விளித்து மந்திரங்கள் இல்லை. ஆனால் தற்காலத்தில் ஸ்ரீ சனீஸ்வர சுவாமி திருக்கோயில் என்பது போல, ஸ்ரீ மன்மோகன் சிங் என்பது போல எல்லாவற்றுக்கும் முன்னால் ஸ்ரீ போடுகிற வழக்கம் நிறைந்து விட்டது. மந்திரங்களிலும் எக்ஸ்ட்ராவாக ஸ்ரீ சேர்த்து போடுவது வழக்கமாகி விட்டது. இதில் ஸ்ரீ என்பதை மற்ற எந்த வார்த்தைகளுடனும் சந்தி சேர்ப்பதே இல்லை. அது தனியாகவே இருக்கும் – ஏனெனில் மந்திரங்களைக் கேட்பவர்கள் தனியாக ஸ்ரீ என்று காதில் வாங்கினால் தான் அந்த மந்திரம் புனிதத்தன்மை உடையது என்று நினைக்கிறார்கள்.
सर्वविघ्नहरस्तस्मै श्रिगणाधिपतये नमः |
ஸர்வவிக்⁴னஹரஸ்தஸ்மை ஸ்ரீக³ணாதி⁴பதயே நம: |
என்ற மந்திரத்தில் ஸ்ரீ என்பது பிற்சேர்க்கை. அந்த ஸ்ரீ இல்லாமலே எட்டு அக்ஷரங்கள் கொண்ட சந்த இலக்கணம் சரியாக இருக்கிறது. ஸ்ரீ சேர்ப்பதால் சந்தம் தவறி விடுகிறது. இருந்தாலும் ஸ்ரீ சேர்ப்பது புனிதமாக இருக்கும் என்று நினைப்பதால் அதை சேர்த்தே சொல்கிறார்கள்.
இது போல ஊர் பெயர்களையும் சம்ஸ்க்ருதப் படுத்தி கூறுவது வழக்கம். கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் சொன்னது “இந்த ஊருக்கு பெயர் பழமலை. பழமையான மலை என்று அர்த்தம். ஆனால் இதை சம்ஸ்க்ருதத்தில் மாற்றியவர் பழமை என்பதை முதுமை என்று எடுத்துக் கொண்டு வ்ருத்தாசலம் என்று கூறி விட்டார். இவ்வாறு பழமலை என்பது கிழமலை ஆகி விட்டது..” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
வேத மந்திரங்களில் மட்டும் அல்லாது தினப்படி ஓதும் ஸ்தோத்திரங்களில் கூட எத்தனையோ விஷயங்கள், அழகான வாக்கிய அமைப்புகள், பொருள் பொதிந்த பிரயோகங்கள் இருக்கின்றன. இவற்றை சரியாக புரிந்து கொண்டு உபயோகிக்க அடிப்படை இலக்கணமாவது தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம். 
(நண்பர் ராஜேந்திரா பதிவில் படித்தது)

1 comment: