Thursday, 26 July 2018

ஆலய பிரவேசம்

மதுரை ஆலய பிரவேசம் (ஜூலை 8, 1939)
=======================================
இன்றைய இந்துக்கள் பலருக்கு அறியப்படாத பெயர் "மதுரை. அ. வைத்தியநாத ஐயர்". இவரை பற்றிய வரலாறு கிடைப்பது என்பது மிக அரிது. இதுதான் திராவிட இயக்கங்களின் பலம் மற்றும் இந்துக்களின் பலவீனமும் ஆகும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம் பேட்டையில் 1890-ம் ஆண்டு மே மாதம் 16-ம் நாள், (16-05-1890) வைத்தியநாத ஐயர் பிறந்தார். சுதந்திரப் போராட்டம் தோன்றிய காலந்தொட்டே ஒப்பற்ற பல தலைவர்கள் மதுரை மாநகரில் தேசிய இயக்கத்தை வளர்த்து வந்தனர். மகாத்மா காந்தியடிகள் 1919-ம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்தார், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் இரண்டாம் முறையாக அங்கு வந்த போது காந்தியடிகள் அரையாடை அணிந்து புரட்சியை உருவாக்கினார். பின்னர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையால் வெகுவாகக் கவரப்பட்ட இளைஞர்கள் பலர் பின்னாளில் மிகப்பெரிய தலைவர்களாகவும், சமூக சேவகர்களாகவும் விளங்கினார். அவர்களில் நமது ஐயரும் குறிப்பிடத்தக்க ஒருவர். வக்கீல் தொழிலுக்குத் தகுதியடைந்த வேளையில், மதுரையில் பிரபலமான வக்கீலாகத் திகழ்ந்த திரு. நடேச ஐயரிடம் ஜுனியராகச் சேர்ந்தார்.

ஹரிஜனங்களை சமுதாயத்தில் சரி சமானமான ஜனங்களாக ஆக்கிட வேண்டுமென்ற உள்ளுணர்வு ஆசை அய்யருக்கு வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருந்தது. தேசவிடுதலைப் போருக்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமத்தையும் அக்கறையையும் விட ஹரிஜன சேவைக்குத்தான் அதிகம் உழைப்பையும் பணத்தையும், காலத்தையும் செலவிட்டார். ஆனால் அது ஒட்டுமொத்த மக்களின் மாற்றமாகவும் இருக்கவேண்டும் என்றே எண்ணினார். உதாரணமாக, 1922 - 24 பெரியார் திருப்பூர் மாநாட்டில் நாடார்கள் கோவிலுக்குள் பரவேசம் செய்வதை பற்றி தீர்மானம் நிறைவேற்ற பேசியதாகவும் அதை எதிர்த்து வாக்களித்தவர்களில் ஒருவர் வைத்தியநாத ஐயர் என்றும் ஒரு செய்தி பரவப்பட்டுவருகிறது. இதில் மறைத்த செய்தி ஒன்று உண்டு, அன்று அந்த தீர்மானம் பேச்சில் மிகப்பெரிய சர்ச்சை வந்தது. அதில இராமாயணம் போன்ற இதிகாசங்களும், புராணங்களும் எரிக்கபடவேண்டும் என்கிற சர்ச்சை பேச்சுகளும் அடங்கும் அதனால் எதிர்ப்பு மட்டுமே மிஞ்சியது, இதனாலேயே
திரு. வைத்தியநாத ஐயர் எதிர்த்து வாக்களித்திருக்கவேண்டும். இதன் பின்பு சேலம் மாநாட்டிலும் இதையே பெரியார் பேசியபோது மிகப்பெரிய பிரச்சனையே உருவானது என்பது வரலாறு. மக்களின் உணர்வுகளை மாற்ற தெரியாமல் வம்படியாக செய்ய முற்பட்டு அந்த முயற்சி பலனளிக்காமலே போய்விட்டது. அதன் பின்பு அவரின் ஆதரவாளர்கள் பல கோவில்களில் நுழைய முற்பட்டபோது மக்கள்களினாலேயே அடித்து விரட்டப்பட்டனர் என்பதும் வரலாறு இத்துடன் ஆலயபிரவேசம் தொடர்பான விசயங்களுக்கு முற்றுபுள்ளியும் வைத்துவிட்டனர்.

மக்களின் ஆதரவோடு "ஆலயபிரவேசம்" நடத்திடவேண்டும் அப்படி செய்வதே இந்து மதத்தின் மறுமலர்ச்சியாக அமையும் எனும் பார்வை ஐயரிடம் இருந்தது என்பதே உண்மை. அதற்கான தருணம் 1932இல் காந்தியடிகளுக்கும், டாக்டர் அம்பேத்காருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது வைத்தியநாத ஐயருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. இதை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிறைவேற்ற தலைவர்கள் அய்யர் என்.எம்.ஆர். டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகாலா பட்டாபிராமய்யா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை மட்டப்பாரை வெங்கட்ராமய்யர், முதலானோரும், மாணவர்களும் மதுரை நகரின் வீதிகளிலும் சந்துகளிலும் வீட்டுக்கு வீடாகவும் சென்று தீண்டாமை விலக்கு ஆலயப் பிரவேச அவசியம் பற்றி தீவிரப் பிரச்சாரம் செய்தோம். இப்படி 5 வருடம் பிரச்சாரம் நடந்தது. வைத்தியநாத ஐயரும் அவருடன் பணியாற்றியவர்களும் செய்த தீவிர பிரச்சாரத்தால் மக்களும் மனது மாறினர். அதற்கு ஆதரவும் தெரிவித்தனர். மீனாட்சி கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.எஸ்.நாயுடு அவர்களும் அவரது குழுவினரும் கோவில் நுழைவுக்கு ஆதரவு காட்டினர். இதற்கிடையே அதை சட்டமாக மாற்ற் எண்ணிய ராஜாஜி அதை நிறைவேற்ற முடியாமல் தாமதம் ஏற்பட்டது. இனியும் பொறுப்பதற்கில்லை என்று அய்யர் 1939 ஜூலை8 இல் ஆலயப் பிரவேசம் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பும் வராமல் இல்லை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் ஒருவர் திரு.நடேச ஐயர், இவரிடமே ஜூனியராக திரு.வைத்தியநாத ஐயர் பணியாற்றினார் என்பது கவனிக்கப்படவேண்டியதாகும்.

இந்நிலையில் உயர்சாதி ஆதிக்கசாதியினர் ஒரு நோட்டீஸ் வெளியிட்டனர். அந்த நோட்டீஸ் “மீனாட்சிக் கோவிலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் பார்’ என்று சவால் விடப்பட்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் ஜூலை 8,1939 அன்று வைத்திய நாதய்யர் தம் வீட்டிலிருந்து பூஜை சாமான்களைத் தனது காரில் வைத்துக் கொண்டு, கக்கன், மற்றும் பல ஹரிஜனங்கள், ஒரு நாடார், தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளர் எல்.என்.கோபால்சாமி, உசிலம்பட்டி வி.முத்து ஆகியவர்களுடன் கோவிலுக்கு செல்ல அங்கே நோட்டிஸ் விசயத்தை கேள்விபட்ட திரு பசும்பொன் முத்து இராமலிங்க தேவர், ஐயருக்கு ஆதரவாக களம் இறங்கினார். எல்லாரும் ஒன்று சேர்ந்து மீனாட்சி கோவில் தெற்குக்கோபுர வாசலை அடைந்தனர். அங்கே எதிர்ப்பாளர்களர்கள் எவரையும் காணவில்லை, தயாராக நின்ற அறங்காவலர் ஆர்.எஸ்.நாயுடு அனைவரையும் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.முதலில் விபூதிப் பிள்ளையாரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு பொற்றாமரைக் குளத்தில் கைகால் சுத்தம் செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கர்ப்பக் கிரகத்திற்குச் சென்றனர். பட்டர்கள் பூஜை செய்தனர். ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடந்துவிட்டது என்று அம்மன் சன்னதி வாசலில் வந்து தரையில் படுத்து கும்பிட்டு, பிரகடனம் செய்தனர்.

இதைக் கண்டு வெகுண்டு எழுந்த எதிர்ப்பாளர்கள், நடேசய்யர் தலைமையில் கூடி, ஐயரையும் அவரது குடும்பத்தினரையும் சாதி விலக்கம் செய்து விட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து சட்டத்தை மீறி ஆலயப்பிரவேசம் செய்ததாக, அய்யர் வகையறா மீது கோர்ட்டில் பிராது தொடுத்தனர். ஆலயப்பிரவேசம் ஒரு சமூகப் பிரச்சனையைப் பெரிதாகக் கிளறி விட்டுவிடும் என்பதை அறிந்திருந்த முதன் மந்திரியான இராஜாஜி அவர்கள் தன் நண்பரை காப்பாற்றவும், இந்த சீர்திருத்தத்தை உடனடியாக சட்டமாகவும் அமல்படுத்த கவர்னர் மூலம் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கச் செய்து முன்தேதியிட்டு ஆலயப் பிரவேசத்தைச் செல்லுபடி ஆக்கினார். [பிராது கொடுத்ததும், அதை தடுக்க அவசர சட்டம் வாங்கியதும், வழக்கு அன்று கோர்ட்டில் கலெக்டர் சென்று சட்ட தீர்மானத்தை கொடுத்ததும், வழக்கு டிஸ்மிஸ் ஆன இந்நிகழ்வும் ஒரு சுவரஸ்யமான வரலாற்று சம்பவமே ]

இவ்வாறு பல நூறாண்டு வருட தீய பழக்கம், ஜூலை 8 1939 அன்று அடிமாண்டு போகுமாறு ஐயர் செய்தார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் இது. மதுரையயங்கும் ஒரே பரபரப்பு. மகிழ்ச்சி ஆரவாரம் அன்று முழுவதும் பூஜைகள் ஒழுங்காக நடைபெற்றன.

[Reference:
http://maduraiavaidyanathaiyer.com/site.htm#aalayapravasam
https://raattai.wordpress.com/…/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8…/
https://www.thehindu.com/…/he-who-remove…/article4499295.ece
]

Monday, 9 July 2018

ஆறு தரிசனங்கள் - 10

6. உத்தர மீமாம்சை (எ) வேதாந்தம்
=================================
பூர்வ மீமாம்சை மற்றும் உத்தர மீமாம்சை இவை இரண்டும் வேதத்தின் இரு பெரும் பிரிவுகளை வைத்துதான். அதில் முந்தைய பிரிவான பிரமாணங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது பூர்வ மீமாம்சை. பிந்தைய பிரிவான உபநிடதங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது உத்தர மீமாம்சை. வேத உபநிடத கருத்துக்கள் அனைத்தும் கொண்டு வர எண்ணி சுருக்கமாகவும் எழுதப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" ஆகும்.
ஞான மார்க்கம்
===============
பாதராயணர் வேதாந்த சுத்திரத்தில் மூலப்பொருள் ஒன்றே என நிலைநாட்டுகிறார். வீடுபேற்றை பெற முக்கிய்மானது கன்மமா? ஞானமா? என்பதில் பூர்வ மீமாம்சை கன்மம் முக்கியம் என்கிறது. இதற்க்கு மாறாக உத்தர மீமாம்சை ஞானமே முக்கியம் என்கிறது.
வேதாந்தத்தின் தத்துவ மையம்
==============================
பிரம்மத்திற்க்கு இருநிலை இருப்பதாக கூறுகிறது. அதாவது, குணத்தை கடந்த நிலை "நிர்க்குண பிரம்மம்" என்றும், குணத்தோடு சேர்ந்து இருக்கும் நிலை "சகுண பிரம்மம்" என்றும் வழங்கப்படுகிறது. இந்த இருநிலைகளின் வேறுபாட்க்கு காரணம் "மாயை". மாயையினால் பிரம்மத்திற்க்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரம்மத்தை சீவர்களாக தோன்ற காரணம் "அவித்தை". வித்தை என்றால் அறிவு, அவித்தை என்றால் அறியாமை. அவித்தையால் பாதிக்கப்பட்ட நிலையே சீவர் கள் எனவும், சீவாத்மா எனவும் வழங்கப்படுகிறது.
வேதாந்ததின் தத்துவ பிரிவுகள்
==============================
விரிந்து கிடந்த வேத, உபநிடத கருத்துக்களை சுருக்கி விளக்கப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" என பார்த்தோம். பிரம்ம சூத்திரம் சுருக்கி எழுதப்பட்ட காரணத்தினால் அதை புரிந்துகொள்ள பெரும் விளக்கங்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. அப்படி எழுதியதின் விளைவுதான் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற தத்துவ விளக்கங்கள் உருவான காரணமாகும். இவ்வுருவாகிய விளக்கங்கள் இன்று பல பிரிவாக இருக்கின்றன. உதாரணமாக - வடகலை, தென்கலை.
உத்தர மீமாம்சை குறிக்கோள்
============================
அவித்தையால பாதிக்கப்பட்டதும், மூன்று குணங்களை கொண்டதுமான சீவர்கள் என்கிற சீவாத்மாக்கள் இதிலிருந்து விடுபட்டு தெளியும் நிலையே மோட்சமாகும். ஏகேமாயான அந்நிலையை அடைய ஞானமே முக்கிய வழியாகவும் கூறுகிறது. ஞானத்தை அடைய அஞ்ஞானத்தினால் அல்லல்படும் சீவாத்மாக்கள் அதை விடுபட்டு ஞானத்தை அடைய தர்மம், நல்லொழுக்கம், இறைவழிபாடு துணையாக உறுதுனை செய்யும் என விளக்கம் கொடுக்கிறது உத்தர மீமாம்சை எனப்படும் வேதாந்த தரிசனம்


இத்துடன் ஆறு தரிசனங்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் நிறைவு பெறுகிறது.

ஆறு தரிசனங்கள் - 09

5. பூர்வ மீமாம்சம்
=================
மீமாம்சை தரிசனங்கள் இரண்டு ஆகும். அவை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகும். அதில், வேத பிரமாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதே பூர்வ மீமாம்சை. வேதம் ஆராய்வுக்கு அப்பாற்ப்பட்டது என்றும் அதற்க்கு கொடுக்கம் விளக்கம் ஆராய்வதற்க்குரியது என விளக்கங்களை அலசுவதே சரியான வழியாகும் என எடுத்துரைப்பதே "பூர்வ மீமாசை" நூலான "மீமாம்ச சுத்திரம்" இதனை இயற்றியவர் ஜைமினி முனிவர் ஆவர்.
கர்ம மார்க்கம்
=============
வேதம் தெய்வீகமானது என முன்னிறுத்தும் பூர்வமீமாசை தரிசனம். வேதம் மூலமாக அறியும் ஞானத்தை விட, அதில் சொல்லப்பட்டுள்ள தர்மத்தையே முக்கியமானதாக கருதுகின்றது. உயிர்கள் நல்ல பலன்களை அடையவேண்டி கிரியை கள், சுவர்க்கம் பூக வேண்டி செய்ய வேண்டிய கிரியைகள், யாகங்கள் அதன் பலன்கள் என கர்மத்தை முன்னிறுத்துவதால் இத்தரிசனத்தை "கர்ம காண்டம்" என்றும் கூறுவர்.
பூர்வ மீமாம்ச தரிசனத்தின் தத்துவ மையம்
=========================================
உலகம் உருவான விதம் பொறுத்தமட்டில் பூர்வ மீமாம்சம் தரிசனம் வைஷிக தரிசனத்தின் கோட்பாட்டை கொண்டதாகும். அதிலும் வேத வாக்கின்படி கண்ணுக்கு புலனாகும் மூவினை கோட்பாடு வரையே ஒப்புக்கொள்ளும். முந்தைய தரிசனங்கள் போல ஆன்மா நித்தியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறது. பூர்வ மீமாம்ச தரிசனம் வேதம் நித்தியமானது என சொன்னாலும், இறைவன் கொள்கையில் உண்டா? இல்லையா? என்பதை பற்றி ஏதும் விவரிக்கவில்லை. ஆனால், கன்மத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை துன்பத்திற்க்கு காரணம் ஆன்மாக்களின் செய்த கன்மங்களே என கூறுவதில் தெரிந்துக்கொள்ளலாம்.
பூர்வ மீமாம்சை குறிக்கோள்
===========================
வேதம் "அபெளருஷ்யத்துவம்" அதாவது யாராலும் இயற்றப்படமுடியாதது என கூறுகிறது. அதனால் வேதத்தில் சொல்லப்படும் தர்மத்தையும், சடங்குகளையும் பின்பற்றுவதே ஆன்மாவின் கடமையாக கூறுகிறது. அக்கடமையை தவறாமல் செய்வதால் நரகத்தை அடையாமல் சொர்க்கத்தை அடைவதே குறிக்கோள் என வலியுறுத்துகிறது. உலக பந்ததிற்க்கு கன்மமே காரணம் எனில் கன்மம் செய்து முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு பூர்வ மீமாம்சை 3 வித கன்மங்களை கூறுகிறது அவை, காமிய கன்மம், பிரதிசித்த கன்மம் மற்றும் நித்திய கன்மம் ஆகும். இதில் முக்தி அடைய முதல் இரண்டு கன்மங்களாஅன காமிய மற்று பிரதிசித்த கன்மத்தை விடவேண்டும், அதோடு நித்திய கன்மத்தை விடாமல் செய்தால் முக்தி கைக்கூடும் என்று பதில் அளிக்கிறது.

ஆறு தரிசனங்கள் - 08

4.நியாயம்
==========
எந்த ஒரு உண்மையையும் விளக்க அதை முதலில் தர்க்க ரீதியாக சரியாக தர்கிக்க வேண்டும். அலசி ஆராயந்து அணுகவேண்டும். இதற்கான கோட்பாட்டை முன்னெடுத்தவர் கெளதம மகரிஷி ஆவார்.
நியாயம் கூறும் அம்சங்கள்
========================
தர்க்க ரீதியாக அணுக வேண்டிய அறிவு நிகழ்வதற்க்கு கீழ்காணும் அம்சங்கள் இன்றியமையாதவை. அவை,
1. அறிய வேண்டிய "அறிபவன்" - பிரமாதா
2. அறிபவன் அறிய வேண்டிய பொருள் - "அறிபொருள்" - பிரமேயம்
3. அறிபடும் பொருளை அறிந்துகொள்ள அறிபவனுக்கு வேண்டிய அறிவை தரும் வழிகள் - பிரமாணம்
4. ஆராயும் அறிவு - பிரமிதி
இதில் நியாய தரிசனம் பிரமாணத்தை முன்னிலை படுத்துகிறது. காரணம் அறிவை தரும் வழிகள் சரியானதாக இருந்தால்தான் அதனை ஆராயும் பிரமிதி சரியான முடிவை தரும் என்பதே, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரமாணம் மொத்தம் ஆறு ஆகும். அதில் நான்கு பிரமாணங்களை மிக முக்கியமாக நியாய தரிசனம் ஏற்றுக்கொள்கிறது. [ பிரமாணங்கள் பற்றிய பார்வை கூறித்த லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.]
நியாய தரிசனத்தின் தத்துவமையம்
================================
வைசேஷிக தரிசனத்தின் அணுக்கொள்கையை ஏற்பதுடன் இறைவன் இருப்பை தர்க்க ரீதியாகவும் வலியுறுத்துகிறது நியாய தரிசனம். எப்படி உலக தோற்றத்திற்க்கு அணு காரணமாக இருக்கிறதோ அதே போல் அந்த அணுக்களின் இயக்க காரணமாக 'ஈஸ்வரன்' இருப்பதை தெளிவுபடுத்துகிறது நியாய தரிசனம். அணுக்கள் போலவே 'ஈஸ்வரன்' நிரந்தரமானது. வைசேஷிகம் கூறும் திரவியங்களை தோற்றுவிக்கவில்லை ஆனால் இயக்ககூடிய பேரறிவாக 'ஈஸ்வரன்' இருப்பதை ஒன்பது சான்றுகளாக கூறி தர்க்கரீதியாக வாதிடுகிறது.
ஈஸ்வர இருப்புக்கான 9 சான்றுகள்
=================================
நியாயம் கூறும் ஈஸ்வர இருப்புக்கான சான்றுகள் 9 ஆகும் அவை கார்யாத் (விளைவு), அயோஜனாத் (அணு சேர்க்கை), த்ரிதே (பிரபஞ்சம் இருப்பை தாங்குவது), பதாத் (வாக்கு), பிரத்யதஹ் (நம்பிக்கை), ஸ்ருதே (வேதம்), வாக்யாத் (வேத கூற்று), சங்க்யாவிசேஷாத் (விசேஷ எண்கள்), அதிருஷ்டாத் (கர்ம பலன்) என்பனவாகும். இக்காரணங்களை வைத்தே ஈஸ்வர இருப்பை நிலைநிறுத்துகிறது நியாய தரிசனம்.
நியாய தரிசனத்தின் குறிக்கோள்
==============================
தர்க்க ரீதியாக அணுகும் நியாயம் தரிசனம் அறிவே ஆன்மா என்கிறது. அந்த அறிவை மழுங்க செய்யும் உலகப்பொருட்களிலிருந்து விடுபட்டு எல்லாவற்றையும் அறிந்த பேரறிவாக கூறப்படும் ஈஸ்வர நிலையை சார்வதே நியாயம் கூறும் முக்தியாகும்.

ஆறு தரிசனங்கள் - 07

3. வைசேஷிகம்
==============
அணு தத்துவம் பேசும் வைசேஷிகம் தரிசனத்தை முறைபடுத்தி இயற்றியவர் கணாத முனிவர் ஆவர். இன்று, அணு தத்துவத்தை முதலில் பேசுபவர்களாக கருதப்படும் 2ம் நூற்றாண்டு கிரேக்க ஞானிகளை விட காலத்தால் முந்தியவர் கணாத முனிவர். அணுக்களின் இரட்டைத்தன்மை, கோள வடிவம், காலம்-இடம் தொடர்பை பேசும் ரிலேட்டிவிட்டி தியரி போன்ற கருத்துக்களையும் வைசேஷிகம் எடுத்துரைப்பது விசேஷம்.
வைசேஷிகம் கூறும் மூலக்காரணம்
==================================
மெய்மைவாதம் ஏற்கும் வைசேஷிகம் பல்வேறு இயல்புகளை உடைய இப்பிரபஞ்சம், உலகம் தோற்றத்திற்க்கு மூலப்பொருள் ஒன்று அல்ல பல என கூறுவது இயல்பானது. இந்த மூலப்பொருள் என்ன என்ற கேள்விக்கு விடையாக வைசேஷிக தரிசனம் கூறுவது "அணு" மற்றும் "பரமாணு" ஆகும். அணு அழியாதவை. அணுக்களே பொருள், உலகம் முதலிய அனைத்தையும் ஆக்கியும் அழிப்பனவையும் ஆகும். இவை பற்றி அறிந்துகொள்ள வைசேஷிகள் ஏற்கும் பிரமாணங்கள் இரண்டு அவை பிரத்தியட்சம் மற்றும் அநுமானம் ஆகும்.
வைசேஷிக தரிசனத்தின் தத்துவ மையம்
=======================================
ஒவ்வொரு பொருளுக்கும் பிரிபடாத நிலை என்ற ஒன்று உண்டு அதுவே அணுவாகும். இவ்வணுக்கள் பலவாகும். இவ்வணுக்களின் கூட்டுத்தொகையே அனைத்து பொருட்களுக்கும் ஆதாரமாகும். இத்தொகைக்கு ஏற்ப பொருட்களின் அளவும் வேறுபடும் என கூறுகிறது. இங்ஙகனம் அணுக்கள் பலவும் ஒன்று சேர்வதும், பிரிவதும், உற்பத்தி ஆவதும், அழிவதும் என அது இயங்குவது எவ்வாறு எனும் கேள்விக்கு வைசேஷிகள் கூறிய விடை "அதிர்ஷ்டம்" எனப்படும் அணுக்களின் தனிப்பட்ட விசேஷமான இயக்கம் என்பதாகும். பிற்காலத்தில் அறிவற்ற அதிர்ஷ்டம் எவ்வாறு அறிவார்ந்த இயக்கத்திற்க்கு காரணம் என்ற கேள்விகள் எழும்பியபோது அந்த விசேஷ இயக்கத்தின் காரணம் "ஈஸ்வரன்" என்ற பதிலை முன்வைத்தது.
வைசேஷிக தரிசனத்தின் ஒன்பது திரவியங்கள்
============================================
மூலப்பொருள் அணு என்றும் அவை பல என்றும் கூறும் வைசேஷிக தரிசனம். இவ்வுலகம் தோற்றத்திற்க்கு தேவைப்படும் கருப்பொருள்களை "திரவியம்" எனவும் அவை ஐம்பூதங்கள், காலம், இடம், மனம், ஆத்மா என்பதாகும்.
வைசேஷிக தரிசனத்தின் குறிக்கோள்
===================================
ஆத்மா தன் மனதின் செயல்பாட்டால் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. தன் அறியாமையினால் செய்யப்படும் செயல்களின் பலனாக நல்வினை மற்றும் தீவினை என இரண்டையும் அனுபவிக்கிறது. இதிலிருந்து விடுபட தன் செயல்களை நிறுத்துவதினாலும், ஏற்கனவே செய்த செயல்களின் பலனாக விளைந்த நல்வினை, தீவினை முடிப்பதினாலும், ஆன்மாவுக்கு "விடுதலை" கிடைக்கும் என்பதே வைசேஷிகள் கூறும் முடிவாகும்.

ஆறு தரிசனங்கள் - 06

2.யோகம்
=========
யோக தரிசனம் முன்பே இருந்திருந்தாலும் இதை முதலில் வரையறுத்தவர் 'பதஞ்சலி முனிவர்'.
யோகம் கூறும் மூல காரணம்
============================
யோக தரிசனம் சாங்கிய தரிசனத்தின் நீட்சியாகவே கருதப்படுகிறது. இதை ஒருங்கே இணைத்து பார்ப்பதற்க்கான காரணம் அதன் அடிப்படை தத்துவங்களின் ஒற்றுமையே ஆகும். சாங்கிய தரிசனத்தின் அடிப்படை தத்துவமான "புருஷன்" மற்றும் "பிரகிருதி" இரண்டையும் ஏற்றுக்கொள்வதோடு முன்றாவதாக "ஈஸ்வரன்" எனும் "விசேஷ புருஷன்" ஒன்று உளன் என்பதை ஏற்றுக்கொள்கிறது. இதனால் யோகத்தை "சேஸ்வராத சாங்கியம்" எனவும், சாங்கியத்தை "நீரீஸ்வர சாங்கியம்" எனவும் கூறுவர்.
யோக தரிசனத்தின் தத்துவ மையம்
==================================
இங்கே யோகம் என்பது "பிரிதல்" எனும் பொருள் கொண்டது. அதாவது "புருஷன்" தன் நிலை மறந்து பிரகிருதியின் உடலில் இணைந்து இருப்பதால், பிரகிருதியை விட்டு பிரிந்து தன் நிலையை உணர்வதயே வலியுறுத்துகிறது. அதோடு ஈஸ்வரன் - விசேஷ புருஷன் என்ற தத்துவத்தையும் முன்னிருத்துகிறது. யோக தரிசனத்தை பொறுத்தவரை இறைவன் படைப்பவன் அல்ல, எல்லாம் அறிந்தவன் அதேபோல் பிரகிருதியின் படைப்புக்கு துணை புரிபவன் மட்டுமே. "புருஷன்" பிரகிருதியின் இணைப்பில் அறியாமையால் இருப்பவன், "விசேஷ புருஷன்" அந்த இணைப்பில் ஒருபோதும் சேராமல் இருப்பவன்.
யோகம் கூறும் "அஷ்டாங்க யோக பயிற்சி"
========================================
சாங்கியம் புருஷன், பிரகிருதி என பகுத்தறிந்து அறியும் ஞானம் முக்திக்கு வழிவகுக்கும் என கூறுகிறது. யோகம் ஞானத்தோடு அந்த முக்திக்கான பயிற்சியையும் அளிக்கிறது. இதற்க்கு எட்டு விதிகள் வகுத்தது அதுவே "அஷ்டாங்க" யோகம் ஆகும். அவை, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி என்பதாகும்.
யோக தரிசனத்தின் குறிக்கோள்
==============================
சித்தி, சுத்தி ஏற்பட்டு நான் எனும் நினைவை ஒழித்தலே யோகம் கூறும் தியானம் ஆகும். அதற்கான பயிற்சியாக அஷ்டாங்க யோகத்தினை கடைபிடிப்பதால், புருஷன் தன் நிலை உணர்ந்து பிரகிருதியின் தளையிலிருந்து விடுபட்டு சமாதி நிலையின் "உறக்கம் அற்ற உறக்கம்" எனும் உணர்வை அடைகிறது. அந்த உணர்வை அடைய "விசேஷ புருஷன்" எனும் "ஈஸ்வரன்" துணைபுரியும். இதுவே யோகம் கூறும் "ஜிவன் முக்தி" யாகும்.

ஆறு தரிசனங்கள் - 05

1.சாங்கியம்
===========
சாங்கிய தரிசனத்தை முதலில் முறைப்படுத்தியவர் 'கபில முனிவர்'.
சாங்கியம் கூறும் மூல காரணம்
=============================
இப்பிரபஞ்சம் தோற்றத்திற்க்கு மூல காரணம் அறிவா? அல்லது பொருளா? என்ற கேள்விக்கு இரண்டுமே என சமநோக்கு பார்வை கொண்ட தரிசனம் சாங்கியம் ஆகும்.
சாங்கிய கோட்பாட்டின் படி அறிவு எனப்படுவது ஆக்கம், அழிவு, மாற்றம் இதற்க்கு அப்பாற்பட்டது, அதை முறையே 'புருஷன்' எனவும், அறிவற்ற ஆனால் இயங்ககூடியதான பொருட்கள் அனைத்தும் முறையே 'பிரகிருதி' எனவும் கொள்கிறது.
சாங்கியம் ஏற்கும் பிரமாணங்கள்
===============================
சாங்கியம் மூன்று பிரமாணங்களை அடிப்படையாக கொண்டது அவை பிரத்தியட்சம், அநுமானம் மற்றும் ஆப்த வாக்கியம் ஆகும். சாங்கியம் கடவுள் இருப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஆப்தவாக்கியத்தை ஒரு பிரமாணமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சாங்கிய தரிசனத்தின் தத்துவ மையம்
===================================
ஆக, மாற்றம் அடையக்கூடிய பிரகிருதியும், மாற்றம் அடையாத புருஷனும் சேர்ந்த இணைப்பே இவ்வுலகம் தோன்றுவதற்க்கு, ஒடுங்குவதற்க்கும் மூலம் ஆகும். இம்மூலப்பிரகிருதியில் இருந்து இவ்வுலகம், இயற்கை எவ்வாறு தோன்ற முடியும் என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சாங்கிய கொள்கையே "சத்காரியவாதம்" ஆகும். மேலும், பிரகிருதியினால் உருவான இப்பொருட்கள் அனைத்து முக்குணங்களால் ஆனவை. அவை சத்வ, ரஜோ, தமோ ஆகும் இங்கு குணம் என்பது பகுதி என குறிப்பிடப்படுகின்றது. புருஷன் அறிவே சொரூபமான பேரறிவு ஆகும். இப்புருஷன் ஒன்று அல்ல பல வாகும். சாங்கிய தத்தவங்களின் படி புருஷன் செயலை புரிவதல்ல, அனுபவிப்பது மட்டுமே, இதனால் புருஷன் ஒரு போக்தா மட்டுமே. போக்தா என கருதப்படும் புருஷன் பிரகிருதியுடன் கொண்ட இணைப்பின் காரணமாக ஏற்பட்ட அறியாமையினால் இப்பிரகிருதியினால் உருவான உடலை தன் உடலாக நினைத்துக்கொள்கிறது இதனால் துயரங்களையும் அடைகிறது.
சாங்கியம் தரிசனத்தின் முடிவு
=============================
அறியாமையினால் போக்தாவாக பிரகிருதியினால் ஏற்பட்ட உடலை கொண்டு உயிராக இருக்கும் புருஷன் இதிலிருந்து விடுபட உயிராக இருக்கும் தனக்கும், உடலாக இருக்கும் பிரகிருதிக்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறியே வேண்டும். இந்த விடுதலையே சாங்கியம் கூறும் முக்தியாகும்.